கந்தசஷ்டி விரத காலப் பகுதியை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தினரின் மேலான செயல்!

கலியுகவரதனாம் கந்தப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு அடியவர்களுக்குப் பழ வகைகள் கையளிக்கும் நிகழ்வைச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (02.11.2024)  ஆரம்பித்து விரதகாலப் பகுதி முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

   

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பழவகைகள் கையளிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கந்தசஷ்டி விரத ஆரம்ப நாளான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 350 அடியவர்களுக்கும், நேற்று ஞாயிற்றுக்கிழமை 350 அடியவர்களுக்கும் , இன்று திங்கட்கிழமை 400 அடியவர்களுக்கும் தலா-1500 ரூபா பெறுமதியான பழவகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  

ஒவ்வொரு  அடியவருக்கும் அப்பிள், திராட்சைப் பழம், பேரிச்சம்பழம், தோடம்பழம், ,கதலி,கப்பல், இதரை, செவ்வாழை, மருத்துவம் ஆகிய வாழைப் பழங்களும் மற்றும் சர்க்கரையும் கையளிக்கப்பட்டு வருகின்றன.  

இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை (05.11.2024) 450 அடியவர்களுக்குத் தலா-1500 ரூபா பெறுமதியான பழ வகைகள் வழங்கவும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.