அர்ச்சுனா எம்பிக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற உத்தரவு!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன்  அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று வியாழக்கிழமை (28.11.2024) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து அவர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதை அடுத்துக் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த- 26ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ்.பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாகப் பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம்-22 ஆம் திகதி கொழும்பு பேஸ்லைன் பகுதியில் காரொன்றை விபத்திற்குட்படுத்திச் சாரதியைத் தாக்கி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத்  தொடர்ச்சியாக அவர் நிராகரித்தமையால் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, இதுதொடர்பான அடுத்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதம்-04 ஆம் திகதி முன்னெடுப்பதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.