யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு வாதரவத்தைக் கிராமத்தின் அக்காச்சி எழுச்சிக்குடியிருப்பைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்கள் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராசா நிரோசின் ஊடாக உடுப்பிட்டி சொர்ண வைரவர் ஆலய நிர்வாகத்தினரின் நிதி உதவியுடன் கடந்த வியாழக்கிழமை (28.11.2024) சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவரின் நிதிப் பங்களிப்புடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிஸ்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மழைவெள்ளத்தால் சூழப்பட்டு செய்ய வழியேதும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த குறித்த பகுதி மக்கள் இந்த உதவியால் மனம் மிக மகிழ்ந்ததுடன் தம் இதயம் நெகிழ்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.