பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்குமாறு ரவிகரன் வலியுறுத்து!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17.12.2024) சர்வதேச இறையாண்மைப் பிணைமுறி மறுசீரமைப்புத் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடைய பெயரும் குறிக்கப்பட்டுள்ளது. இது காலா காலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது.

அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமையும். அந்த வகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவு கூருமிடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இறந்தவர்களை நாங்கள் அடக்கம் செய்யும் போது கல்லறைகளை அதன் மேல் அமைக்கின்றோம். அந்தக் கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவு தினங்களில் பால் தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபங்கள் ஏற்றித் தங்களுடைய மனக் கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதி தாருங்கள். இனப் பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதி தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.