உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?


உடுப்பிட்டி இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக் கோரி உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம்-06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (19.12.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

கடந்த மே மாதம்-05 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பொது அமைப்புக்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் சட்டத்தரணிகளான மயூரன்,சந்திரசேகரம், பெனிஸ்லஸ் துஷாந் மற்றும் ஆன் குலநாயகம் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த மதுபானசாலையை ஏன் மூடக் கூடாது? என்பதற்கான காரணம் கேட்டு மதுபானசாலை உரிமையாளர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் நீண்டநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந் நிலையில்  உரிமையாளர்கள் சார்பாக மற்றைய உரிமையாளரின் சாட்சியம் அடுத்த வழக்குத் தவணையான ஜனவரி-06 ஆம் திகதியன்று மன்றில் அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.