1965 ஆம் ஆண்டுக்கு பின் ஆதன மீள் மதிப்பீடு - ஒரேநாளில் 75 வீதமான சோலை வரியை செலுத்திய மக்கள் - இலங்கையில் பதிவாகிய வரலாற்றுச் சாதனை

 


வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) செயலாளர் கணேசன் கம்ஸனாதன் தலைமையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கம்பர்மலை (01) வட்டாரத்தில் ஒய்வு பெற்ற விலைமதிப்பீட்டாளரின் வழிகாட்டல், நெறிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பில் சபையின் 22 உத்தியோகத்தர்களினால் 1965 ஆம் ஆண்டுக்குப் பின் 1009 ஆதனங்களுக்கு ஆண்டுப் பெறுமானங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. என்பதுடன்  75% ஆன மக்கள் ஒரே நாளில் ஆதன வரி செலுத்தியுள்ளார்கள். குறித்த பணியில் ஈடுபட்ட 22 உத்தியோகத்தர்களுக்கு கௌரவ ஆளுநரினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். 16.12.2024 ஆம் திகதி முதல் மூன்று வாரங்கள் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு செயற்பாடுகளும் 07 சனசமூக நிலைய நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக இருவாரங்கள் கலந்துரையாடல்கள் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தன்னார்வமாக முன்வந்து ஒரே நாளில் 75 வீதமான ஆதன வரியை செலுத்தி உள்ளார்கள். 

1965 ஆம் ஆண்டுக்கு பின் வட்டாரமொன்றில் ஆதன மீள் மதிப்பீடு செய்து ஒரே நாளில்  75 வீதம் வரியை அறவிட்டமை  இலங்கை வரலாற்றில் முதன் முறையென நிகழ்வில் பங்கேற்ற அரச உயரதிகாரியொருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

ஏனைய மக்களும் சோலை வரிகளை தாமாக முன்வந்து செலுத்த ஏதுவாக, உடுப்பிட்டி கம்பர்மலை மக்களின் முன்மாதிரியை பாராட்டி கரவெட்டி பிரதேச சபையினால் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை வருமாறு, 

கரவெட்டி

2025.01.1

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி - கம்பர்மலை வட்டாரம் (01)

உள்ளூராட்சி மன்றத்தின் சுய ஆதன வரி மீள் மதிப்பீட்டு செயற்திட்டம் - 2025 

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதே சபையின் ஆளுகைப் பிரதேசத்தில் மொத்தமாக 19 வட்டாரங்கள் உள்ளன. கம்பர்மலை வட்டாரம் .உடுப்பிட்டி வடக்கு (J / 353) கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கியதான 0.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டதாகும். 

கம்பர்மலை வட்டாரத்தில் 22 வீதிகளும் 1006 காணித்துண்டங்களும் கொண்டதாக உள்ளன. இவ்வட்டாரத்தில் 733 குடும்பங்கள் கொண்ட 2131 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இப்பகுதியானது ஒரு (உடுப்பிட்டி) தேர்தல் தொகுதியாக நீண்ட காலம் இருந்து வருகின்றது. 


உடுப்பிட்டிப் பகுதியை உள்ளடக்கியதாக கிராம சபை இருந்த (1965 ஆண்டு) காலத்தில் ஆதன வரி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இன்று வரை ஆதன வரி பெறுமானங்கள் நடைமுறையில் உள்ளன. முன்னைய கால மதிப்பீட்டின் பிரகாரம் ஒரு ரூபா முதல் ரூபா 128 வரை இடைப்பட்ட தொகை ஆதன வரியாக உள்ளது. குறித்த தொகை அறவீடு செய்வதில்லை. எமது அலுவலகத்தினால் பேணப்பட்டு வரும் இடாப்புகளில் 58 வருடங்களுக்கு முன்னர் ஆதனங்களை வைத்திருந்த உரிமையாளர்களின் பெயர்கள் உள்ளன. தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

ஆதன உரிமையாளர்களை இனங்கண்டு ஆதன அறிவித்தல் படிவங்களை (கே.படிவம்) விநியோகிப்பதில் நிர்வாக ரீதியான இடர்பாடுகள் உள்ளன. தற்போது உடுப்பிட்டி கிராம சபையின் எல்லை எட்டு வட்டாரங்களை உள்ளடக்கியதாக உள்ளன. கிராம சபை இயங்கிய (1965 ஆண்டு) காலத்தில் 5307 ஆதனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது 12543 ஆதனங்கள் உள்ளன. குறித்த 58 வருட காலத்தில் ஆதனங்கள் பல துண்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன என்பதுடன் உரிமையாளர்களும் மாறியுள்ளார்கள். இதனால் எமது பதிவேடுகளை கொண்டு ஆதனங்களின் இட அமைவு மற்றும் உரிமையாளர்களை இனங்கண்டு கொள்ள முடியாத நிலைமைகள் காணப்பட்டுள்ளன.

எமது சபை ஆதன மீள் மதிப்பீடுகளை செய்வதற்குரிய பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்தும் விலை மதிப்பீட்டு திணைக்களத்துடன் இணைந்து செயற்படக் கூடியதாக அமைந்திருக்கவில்லை. இதனால் தொடர்ந்தும் சபைக்கு வருமான இழப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. மக்களுக்குரிய அடிப்படையான பல தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் சபைக்கு நிதி வளமில்லை. ஆதன மீள் மதிப்பீடுகளை மேற்கொண்டால் மட்டுமே மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்பதை உணர்ந்து கொண்டோம். எனவே 1987 ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 140 (1) பிரிவின் பிரகாரம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களின் அங்கீகாரத்துடன் சபை செயலாளர் அவர்களினால் நியமிக்கப்பட்ட எவராயினும் ஒருவரால் ஆதன மதிப்பீட்டினை மேற்கொள்ள முடியும் என்ற சட்ட ஏற்பாட்டினை எமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆதன மதிப்பீட்டினை கம்பர்மலை வட்டாரத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. 


சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒய்வுபெற்ற விலைமதிப்பீட்டாளர் ஒருவரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அங்கீகாரத்துடன் சபை செயலாளரினால் 2024.12.16 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அவருடடைய முழுமையான வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, நேரடி மேற்பார்வையின் கீழ் எமது சபையின் வட்டார உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து, வெளிக்கத்தில் ஆதனங்களின் ஆண்டு மதிப்பீடு செய்யும் பணி 2024.12.17 கம்பர்மலை வட்டாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

வட்டாரத்தின் ஆதன மதிப்பீடுகள் அனைத்தும் 2024.12.28 களப்பணிகள் நிறைவுற்றவுடன் பதிவேடுகள் தயாரிக்கும் பணி ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆதன அறிவித்தல் படிவங்களும் தயாரிக்கப்பட்டு 2025.01.01 ஆம் திகதியன்று ஒப்பமிடப்பட்டது. 2025.01.03, 2025.01.04 ஆகிய இரு திகதிகளிலும் 954 படிவங்களில் 852 (89%) ஆதனங்களுக்குரிய அறிவித்தல் படிவங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன. 

விலைமதிப்பீட்டு திணைக்களத்தின் உதவியின்றி, இலங்கையில் முதல் முறையாக உள்ளூராட்சி மன்றமொன்று சுயமாக ஆதன வரி மதிப்பீட்டை ஒரு வட்டத்தில் முழுமையாக நிறைவேற்றியுள்ளது. 

இவ்வாறான நிகழ்வை கௌரவ ஆளுநரின் தலைமையில் நடாத்த வேண்டும் என பலர் விரும்பியதால், கௌரவ ஆளுநரிடம் நிகழ்வுக்கான அனுமதி கோரப்பட்டது. கௌரவ ஆளுநர் 2025.01.10 ஆம் திகதி நடாத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தார். கம்பர்மலை வட்டார மக்களுக்கு பத்து நாட்களாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆதன வரியை 2025.01.10 ஆம் திகதியன்று செலுத்துவதற்குரிய வகையிலான ஏற்பாடுகளை செய்திருந்தோம். 

கம்பர்மலை வட்டார எல்லைக்குள் அமைந்துள்ள ஏழு சன சமூக நிலைய தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரை அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி எமது நிகழ்வுகளை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. ஆதன வரி அறவீடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். மக்களிடையே எமது கருத்துகள் சென்றடைவதற்குரிய செயற்பாடுகளை சனசமூக நிலைய அங்கத்தவர்கள்  இணைப்பாளராக செயற்பாட்டார்கள். இதனால் எமது செய்திகள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றடைந்தன. 

கௌரவ ஆளுநரிடம் ஆதன வரியை செலுத்தி, பற்றுச்சீட்டை பெறுவதற்காக 25 வரியிறுப்பாளர்களை நாங்கள் தெரிவு செய்து நிகழ்வை உத்தியோகபூர்வமாக கௌரவ ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கலாவாணி சனசமூக நிலையத்திலும், பாரதி சனசமூக நிலையத்திலும் மக்கள் ஆதன வரியை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எமது பணிகள் மாலை 6.00 மணி கடந்து சென்றன. மக்களும் அலை அலையாக வருக தந்து ஆதன வரியை செலுத்தினார்கள். கம்பர்மலை வட்டாரத்தில் மொத்தமாக  ரூபா 933,753.76 ஆதன வரி செலுத்த வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இக்கணிப்பீடானது 18,675,075.25 மொத்த ஆண்டு பெறுமதியின் 5 சதவீதமாகும் எனினும் முன்னர் 10 சதவீதம் அறவீடு செய்யப்பட்டு வந்துள்ளன. அன்றைய நாள் (2025.01.11) 690,212.98 தொகையை 715 (75%) வரியிறுப்பாளர்கள் செலுத்தியுள்ளார்கள். இது ஒரு வரலாற்று பதிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும். 


இந் நிலைமைகளை மாற்றியமைப்பதற்கு பிரதம விலைமதிப்பீட்டார் (ஒய்வு பெற்றவர்), வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வருமான பரிசோதகர்கள், உடுப்பிட்டி உப அலுவலக உத்தியோகத்தர்கள், சபையின் உத்தியோகத்தர் ஆகியோரின் அயராத அர்பணிப்புடனான சேவைகளும் ஆற்றலும், கம்பர்மலை வட்டார மக்களின் ஒத்துழைப்பும் சனசமூக நிலையங்களின் உதவிகளும் இவ்வாறான வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. தொடர்ந்து மிகுதியாக உள்ள வட்டாரங்கள் எமது சபையின் சுய ஆதன மதிப்பீட்டு திட்டத்தில் உள்ளடக்கி, 2025.12.31 திகதிக்கு முன்னராக முழுமையாக இலக்கை அடைவது என திட்டமிடப்பட்டுள்ளது.