1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் திருமுறை வகுப்பில் மாணவனாக இருந்ததில் பெருமையடைகின்றேன்.
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் துர்க்காதேவி ஆலய அலுவலகப் பணியில் சிறியேன் இணைந்த காலம். அம்மையாரின் தலைமையில் ஆலயத்தில் பல நிர்வாக அனுபவங்கள் பெற்ற காலங்கள் மறக்க முடியாதது. அன்றைய காலத்தில் இடம்பெயர்ந்தோரை ஆதரித்து உணவுகள் வழங்கிய நினைவுகளை எண்ணிப் பார்க்கின்றேன்.
இக் காலப் பகுதியில் அம்மையாருடன் தங்கியிருந்து பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தமையை எண்ணி இன்றும் அகம் மிக மகிழ்கிறேன். எனக்குச் சிறிது நோய் ஏற்பட்டாலும் அம்மையார் கவனித்துக் கொள்ளும் பாங்கினை என்னவென்பேன்?
ஏழைகளுக்கு உதவுதல், கல்வியை ஊக்குவித்தல், வறுமையை இனம் கண்டு உணவு வழங்குதல், ஆதரவற்ற பெண் பிள்ளைகளை அரவணைத்துக் காத்தல் போன்ற பல அறப்பணிகளை ஆற்றிய அம்மையாரிடம் நேரம் தவறாமை நான் கற்றுக் கொண்ட முக்கிய வாழ்க்கைப் பாடம். அம்மையாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்கிறேன்.
ந.உமாகரன்
(தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர்)