மழைக்கு மத்தியிலும் வெகு விமரிசையாக இடம்பெற்ற வல்வை பட்டத் திருவிழா

 


தைப்பொங்கலன்று வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டத்திருவிழா, இடையிடையே மழை வந்தாலும் ஆரம்பமுதல் இறுதிவரை அதே எதிர்பார்ப்புடன் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது.


இம்முறை இடம்பெற்ற வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் முதன்முறையாக நூறுக்கும் மேற்பட்ட பட்டங்களுடன் (130 பட்டங்கள்) இளைஞர்கள் பங்கெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோர் குறித்த நிகழ்வை பார்வையிட்டு இருந்தார்கள்.
வல்வை பட்டத்திருவிழாவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பட்டங்கள்...
1- உயிர்த்தெழும் ராகன்
2- மின் பிறப்பாக்கி
3-தூக்கிச் செல்லும் திரையரங்கு என்பனவாகும்.
முதல் இரண்டு இடங்களையும் பெற்ற பட்டங்களை விநோதன் வடிவமைத்திருந்தார். இவர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வல்வை பட்டத் திருவிழாவில் சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.