சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவு பதிவு செய்யப்பட்டு அதன் செயற்பாடுகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவுடன் விதையனைத்தும் விருட்சமே குழுமம் பசுந்தேசம் அமைப்பு மற்றும் தென்மராட்சிப் பொது அமைப்புக்களின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19. 01. 2025) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவில் இடம்பெற்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் கோ.ரஜீவ் கலந்து கொண்டு குருதிக் கொடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்தக் குருதிக் கொடை முகாம் நிகழ்வில் 15 இற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தலைமையிலான இரத்தவங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினரும் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.