அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கோட்பாடுகள் மக்களின் கோரிக்கைகளாக, ஈழத் தமிழ்மக்களின் இறைமையை உறுதிப்படுத்தக் கூடிய கோரிக்கைகளாக முன்வைக்கப்படும் போது அதற்கு மிகப் பெரிய வலு கிடைக்கும். அந்த வலுவை நாங்கள் கூட்டுத் திரட்சியாக உருவாக்க வேண்டும். கட்சி வேறுபாடுகள், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் கூட்டு உணர்வு உருவாக்கப்படுமாகவிருந்தால் தான் தமிழ்மக்கள் புதிய அரசியல் அமைப்பை மிகச் சரியாகவும், வலுவாகவும், உறுதியாகவும், ஒரு திரட்சியாகவும் எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால் எங்கிருந்தோ எங்களுக்குத் தரப்படும் பரிந்துரைகளின் அடிப்படையிலும், சிபாரிசுகளின் அடிப்படையிலும் முன்வைக்கக் கூடிய தீர்வுப் பொதிகளில் நாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டித் தான் ஏற்படுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வழக்கறிஞருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் அண்மையில் பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையக மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி மிகப் பெரிய வலுவான கட்டத்திலிருந்தாலும் கூட அந்த வலுவான அரசியல் பிரதிநிதித்துவம் ஊடாகத் தேசிய மக்கள் சக்தி எதனைச் சாதிக்கப் போகின்றது? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தமிழ்மக்கள் மத்தியிலிருந்து மாத்திரமல்லாமல் தெற்கிலிருந்தும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குவிந்திருக்கின்றது. இந்த அதீத எதிர்பார்ப்புத் தான் அவர்களுக்கான பெரிய அச்சமாகவும் தற்போது உருவாகி வருகிறது.
ஒரு எதிர்பார்ப்பு அதி உச்சவளவில் இருக்கின்ற போது அந்த எதிர்பார்ப்பை எப்படித் திருப்தி செய்து கொள்வது என்பதை இன்றளவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்னகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தக் கூடிய தடயங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு அரசியல் நல்லெண்ணத்தை எடுத்துக் காட்டும் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்கள் கண்களுக்கோ எங்கள் அறிவுப் புலத்திற்கோ தெரியவில்லை.
குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச் சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை நிச்சயமாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
தற்போது தமிழ்மக்களின் மிக முக்கியமான பிரச்சினையாகவிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோரின் நிலை தொடர்பான வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும், மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், ஈழத்தமிழர்களின் நினைவூட்டல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வடக்கு- கிழக்குப் புனரமைப்புத் தற்போது மிகவும் அவசியமாகவுள்ள நிலையில் அதற்குச் சாத்தியமான மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏதாவதொரு அதிகார சபையை அமைப்பதற்கான முன்முயற்சி அல்லது முன்வரைபு அல்லது யோசனை அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், இராணுவ மயமாக்கம் தவிர்க்கப்பட வேண்டும், இராணுவக் குவிப்புக்கள் விலக்கப்படக் கூடிய நிலை அறிவிக்கப்பட வேண்டும், அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கின்ற நிலங்களை விடுவிக்கக் கூடிய நல்லெண்ண சமிக்ஞை தரப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் ஊடாக ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான தளத்தைத் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்குவதற்குக் காலம் அவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றது. ஆனாலும், இதுவரை கடந்து வந்திருக்கக் கூடிய நாட்கள் இந்த விடயங்கள் சார்ந்து எங்களுக்கு அர்த்தம் பொதிந்த, ஆக்கபூர்வமான சமிக்ஞைகளை இதுவரை தரத் தவறியுள்ளது என்பதை நாமனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியவர்களாகவிருக்கின்றோம்.
ஆகவே, இந்தப் பந்து தற்போது எங்கிருக்கிறது. அந்தப் பந்தை ஈழத்தமிழர்கள் மீது விடுவிப்பதற்கான பெரிய பொறுப்பு அரசாங்கமென்ற வகையில் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்திடமிருக்கிறது. இவ்வாறான சமிக்ஞைகள், அறிவிப்புக்கள் விடுவிக்கப்பட்டால் தான் நாங்கள் ஈழத்தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பேசுவதற்கு அல்லது அவற்றைப் பற்றி உரையாடுவதற்கு, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன் முயற்சிகள் பற்றிய காத்திரமான முயற்சிகளுக்குப் போவதற்கு முன்பதாகச் சர்வதேச நிச்சயமாகச் சர்வதேச மத்தியஸ்த்துடனான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான கட்டத்தை நாங்கள் அடைய வேண்டும். இதனை நாங்கள் அடையத் தவறுவோமானால் மீண்டும் கடந்த கால புதிய அரசியலமைப்புத் தொடர்பான விவாதங்களுக்குள் எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடித்துக் கொள்ள வேண்டி ஏற்படும். ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய மிகச் சரியான புரிதலோடும், அதற்கான அங்கீகாரத்துடனும் நிச்சயமாக ஒரு சர்வதேச மத்தியஸ்த்துடனான இணக்கப்பாடொன்று ஈழத்தமிழ்மக்களுக்கும், அரசாங்கத்துக்குமிடையில் எட்டப்பட வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கனிகின்ற பட்சத்தில் தான் நாங்கள் நிச்சயமாக ஆக்கபூர்வமான புதிய அரசியலமைப்பில் நாங்கள் பேசவேண்டிய விடயங்களை உறுதியாக முன்வைக்க முடியும்.
அவ்வாறான சர்வதேச மத்தியஸ்த்துடனான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயமாக நாங்கள் இதுவரை பேசி வருகின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை மிக விரிவான வியாக்கியானத்துடன் முன்வைக்கக் கூடியவர்களாக நாங்களிருக்க வேண்டும். அதற்கான தயார்படுத்தல்கள் ஈழத்தமிழர்கள் பால் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான நிலை உருவானால் ஈழத்தமிழ்மக்கள் தங்களுக்கென அடையாளப்படுத்தப்பட்ட தேசம் சார் புவியியல் பரப்பை உடையவர்கள், பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள், வரலாற்று அடிப்படையிலும், தீவில் காலணித்துவ காலத்திற்கு முந்திய இருப்பின் பெயரிலும், அவர்களுக்கு இருக்கக் கூடிய மொழியியல், புவியியல், சமூக பொருளாதார, அரசியல் உரித்துக்களின் அடிப்படையிலும் ஒரு தேசியக் குழுமமாக ஒன்றிணைவதற்கான உரிமை மற்றும் அங்கீகாரத்தை நாங்கள் எங்களின் முதலாவது கோரிக்கையாக முன்வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் கவனம் செலுத்தாதவிடத்து நாங்கள் எங்களுக்குத் தரப்படுகின்ற தீர்வுப் பொதிகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசக் கூடியவர்களாக இருக்கக் கூடியதொரு துர்ப்பாக்கிய நிலை தான் எங்களுக்கு ஏற்படும். அல்லது வெவ்வேறு வகையான அழுத்தங்களின் பேரில் சமாளிக்க முடியாத நெருக்கடிகளை, அச்சுறுத்தல்களைச் சந்திக்க வேண்டியவர்களாக மாற வேண்டிய கடப்பாடு எங்களை வந்து சேரும்.
இதுவரை இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்கள் மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். வடக்கு- கிழக்கு ஈழத்தமிழ்மக்களின் வரலாற்று மற்றும் பாரம்பரியத் தாயகம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நிலம் சார்ந்த தொடர்ச்சியும், ஒருமைப்பாடும் தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்துவதாக, அவர்களின் வாழ்வியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதை இனம்சார்ந்து மாத்திரமல்லாமல் மொழிசார்ந்த அடையாளத்தை சுயநிர்ணய அலகின் பகுதியாக அமையக் கூடியது என்பதன் அடிப்படையில் வடக்கு- கிழக்கு இணைந்த தாயகம் என்பதை நாங்கள் உரத்துச் சொல்லக் கூடியதாக எங்கள் அடுத்த கோரிக்கை வலியுறுத்தப்பட வேண்டும்.
தற்போது களத்தில், நிலத்தில் இருக்கக் கூடிய மக்களுக்குச் சமனாகப் புலம்பெயர்ந்தும் எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ச் சமூகம் ஈழத்தமிழர்களின் ஒருங்கிணைந்த பகுதி என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சுயநிர்ணயம் பற்றிய அரசியல் அபிலாசைகள் தொடர்பான எத்தகைய பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுமாகவிருந்தாலும் அதில் புலம்பெயர் சமூகமும் பங்கேற்க்க கூடிய நிலையை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மதங்களையும் சமனாகப் பேணக் கூடிய மதச் சார்பற்ற நிலையை வடக்கு- கிழக்கு எங்கனும் உறுதிப்படுத்தக் கூடிய, தீவெங்கிலும் வாழக் கூடிய தமிழ்பேசும் மக்களுக்கான மொழியுரிமையை வடக்கு- கிழக்கில் சிங்களம் பேசுபவர்களுக்கும் உறுதிப்படுத்தக் கூடிய நிலையை நாங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
வடக்கு- கிழக்கில் அமையக் கூடிய சுயநிர்ணய அதிகாரமுடைய அலகானது இயல்பாக, தன்னியல்பாகத் தீவின் ஏனைய பகுதிகளுடன் உறவாடக் கூடிய நெகிழ்வான கூட்டிணைப்பாக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய சுயநிர்ணய உரிமைகளுக்குப் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுமாகவிருந்தால் சர்வதேச நீதிமன்றம் போன்ற சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய நீதிப் பொறிமுறைகள் ஊடாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஏதுநிலைகள் பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான அடிப்படைக் கோட்பாடுகளில் நாங்கள் உறுதியாகவிருந்து கொண்டு, அவற்றைப் பேசுபொருளாகக் கொண்டு அவற்றின் தளத்தில் நாங்கள் புதிய அரசியலமைப்புப் பற்றிய யோசனைகளை எதிர்நோக்குபவர்களாக இருப்போமேயானால் நிச்சயமாக அது எங்களின் நீண்ட தியாக வரலாறு கொண்ட விடுதலைப் போராட்டத்திற்கு ஏதோவொரு வகையில் நியாயம் கற்பிப்பதாக அமையும். அந்தக் கட்டத்தைத் தமிழ்மக்கள் உறுதிப்படுத்துவதற்குத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் அல்லது அரசியல் கட்சிகளுக்கு அப்பால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
(செ.ரவிசாந்)