காரைநகரில் நாளை முழுநாள் நிகழ்வாக காரைநகர்ப் பட்டறை நிகழ்வு

பிரித்தானியக் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் காரைநகரைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் காரைநகர்ப் பட்டறை நிகழ்வு- 2025 நாளை ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) காலை-09 மணி முதல் காரைநகரில் சலெஞ்செர்ஸ் விளையாட்டு மைதானத்தில் முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகர்ப் பட்டறை நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (16.01.2025) முற்பகல் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

"ஊர் திரும்புதல்" என்கின்ற பிரதான கருதுகோளை முன்வைத்து ஊரின் கலை மற்றும் பாரம்பரியம், விவசாய வளர்ச்சி மற்றும் நீர் மேலாண்மை, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்பான பல விடயங்கள் இந் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு அவை தொடர்பாகப்  பேசப்படவுள்ளன.

எமது பாரம்பரிய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் ஒடியல் கூழ் மற்றும் சிறுதானிய உணவுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன. இந் நிகழ்வில் கடல் உணவுகள், பதநீர் மற்றும் பிற பாரம்பரிய உணவுப் பொருட்கள் மக்கள் சுவைத்துப் பார்க்க முடியும்.           

நிகழ்வின் இறுதியில் காரைநகர் பட்டறை நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட நீச்சல், கட்டுமரம், கபடி, கிளித்தட்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளினதும், சதுரங்க, கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்படும்.

நிகழ்வில் காரைநகர் மக்களுடன் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.