ஈழத்துச் சித்தர் நல்லூர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு அண்மையில் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் நல்லூர் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர் வே.சிவகுருநாதன் தலைமையில் பக்திபூர்வமாக நடைபெற்றது.
திருமுறை மற்றும் நற்சிந்தனைப் பாடல்கள் பண்ணுடன் ஓதப்பட்டமையைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் வலிகாமம் கல்வி வலய ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், சைவப் புலவருமான சு.தேவமனோகரன் கலந்து கொண்டு "புராணபடன மகிமை" எனும் தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து சிவபுராணம் ஓதுதலுடன் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை நிகழ்வும் இடம்பெற்றது. இறுதியாகக் குருபூசை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.