யாழ்.மாவட்டம், வடக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மீதான மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முயற்சியாளர் சங்கத்தால் நடாத்தப்படும் பஞ்சவர்ணம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய விற்பனைக் கூடம் திங்கட்கிழமை (20.01.2025) பிற்பகல் யாழ்.நகரில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பஞ்சவர்ணம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனைக் கூடத்தில் அனைத்து வகையான உற்பத்திகளையும் விற்பனை செய்வதற்கான ஏதுநிலையொன்றை உருவாக்குமாகவிருந்தால் நிச்சயம் அதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும்.
மாவட்டத் தொழில் முயற்சியாளர் சங்கம் மிகவும் வினைத் திறனாகச் செயற்பட்டு ஆரோக்கியமானதொரு சூழலில் இந்த விற்பனை நிலையத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் எனவும் கூறினார்.
(செ.ரவிசாந்)