வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணி: கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

"வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" முன்னெடுக்கப்பட்ட மாபெரும் எழுச்சிப் பேரணி தொடர்பான  வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (14.02.2025) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சிப் பொலிஸார் ஊடாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரும் அறிவித்தலை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (13.02.2025) முற்பகல்-11 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வைத்து  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் தனிச் சிங்கள மொழியில் கையளித்துள்ளனர்.       

இந் நிலையில் தனிச் சிங்கள மொழியில் வழக்குத் தொடர்பான அறிவித்தலை வழங்கியதன் ஊடாக மொழியுரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தவத்திரு.வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். 

'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி 2023 ஆம் ஆண்டில் சுதந்திர நாளான பெப்ரவரி மாதம்-04 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகி 07 ஆம் திகதி வெற்றிகரமாக மட்டக்களப்பில் நிறைவடைந்தது. குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் 05 ஆம் திகதி கிளிநொச்சியில் பேரணியை முன்னெடுத்திருந்தனர். இந் நிலையில் சட்டவிரோதமாக முன்னெடுத்த பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து வேலன் சுவாமிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட 09 பேருக்கு எதிராகக் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கிளிநொச்சிப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கே இன்று மீண்டும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.