ஊடகப் பணிகளுக்கு ஊடாகச் சமூகத்தை முன்னிறுத்தியவர் பாரதி!

ஊடகப் பணிகளுக்கூடாக சமூகத்தை முன்னிறுத்தலாம் என வாழ்ந்து காட்டியவர் அமரர்.பாரதி இராஜநாயகம் என மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை இராஜநாயகம் பாரதியின் மறைவையொட்டி அந் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அஞ்சலிச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மாற்றுத் திறனாளிகளுக்குக் கருவி நிறுவனம் ஆற்றுகின்ற  பணிகள் பற்றி அறிந்து அதனோடு தான் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பில் 2017 ஆம் ஆண்டு கருவி நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்ட நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகக் கருவி நிறுவனத்தில் தன்னை ஒரு அங்கத்தவராக இணைத்துக் கொண்டதோடு பல வளவாளர்களை இணைத்துக் கொண்டார். அவரூடாக இணைந்து கொண்ட பலர் தொடர்ச்சியாகக் கருவி நிறுவனத்தின் பணிகளுக்கு உதவிவருகிறார்கள்.

கடந்த-18. 09.2023 அன்று தொட்டு கருவி நிறுவனத்தின் இரண்டாவது பணிப்பாளர் சபையில் கௌரவ பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்டதோடு கருவியின் தலைமைக் காரியாலயக் கட்டடப் பணிகளுக்கான நிதி சேகரிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தான் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் எமது சமூக மாற்றத்திற்காய் உழைத்த ஆத்மா இன்று மௌனித்திருக்கின்றது. அவர்கள் இன்று எம்முடன் இல்லை. நெஞ்சு கனக்கும் நினைவலைகளோடு அவருக்கு விடைகொடுக்க வேண்டியிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா கருவி நிறுவனத்தின் பணிகளைத் தொடர்ந்தும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

அன்னாருக்கு கருவி நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கை ஆக்குவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.... சாந்தி.... சாந்தி..... எனவும்  அந்த அஞ்சலிச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.