மகா சிவராத்திரியை முன்னிட்டு சந்நிதியிலிருந்து திருக்கேதீச்சரம் நோக்கிய பாதயாத்திரை நிறைவு!

சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரத நன்னாளை முன்னிட்டு உலக சைவத் திருச்சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து முன்னெடுக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவலிங்கப் பெருமானுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தியைத் தாங்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை கடந்த வியாழக்கிழமை (20.02.2025) முற்பகல்-11 மணியளவில் தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மகா சிவராத்திரி நன்னாளான இன்று புதன்கிழமை (26.02.2025) திருக்கேதீச்சரத்தில் இனிதே நிறைவுற்றது.       

வரலாற்றுச்  சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பூசை வழிபாடுகளில் பாதயாத்திரைக்கு எடுத்துச் செல்லும் வேல், சூலம் என்பன வைத்து விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலக சைவத்திருச் சபையின் தலைவர் சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ.கதிர்குமாரசுவாமி சுமூகலிங்கம் சிவாச்சாரியார் கலந்து கொண்டு பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தார்.

பாதயாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்தைச் சென்றடைந்து அங்கு வழிபாட்டிடத்தில் வேல், சூலம் என்பன வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பாதயாத்திரைக் குழுவினர் சந்நிதியான் ஆச்சிரமத்தில் உணவு, தேநீர்  உபசாரத்தை நிறைவுசெய்து சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி செ.மோகனதாஸ் சுவாமிகளிடம் ஆசிகள் பெற்றுத் தமது பாதயாத்திரையைத்  தொடர்ந்து வருகின்றனர்.                         

பாதயாத்திரைக் குழுவினர் பருத்தித்துறை வீதி ஊடாகப் பல்வேறு இந்து ஆலயங்களைத் தரிசித்து கடந்த வியாழக்கிழமை இரவு நல்லூரைச் சென்றடைந்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பாதயாத்திரைக்  குழுவினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தமது பாத யாத்திரையைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் பல இந்து ஆலயங்களைத் தரிசித்து இன்று பாதயாத்திரையை நிறைவுசெய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.