யாழ்.தாவடியின் நுழைவாயிலிலே வீற்றிருந்து அருள்பாலிக்கும் தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை-08.21 மணி தொடக்கம் முற்பகல்-10.33 மணி வரையுள்ள சுப வேளையில் மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
12 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறும் மகா கும்பாபிஷேகத் திருக் காட்சியைக் காணக் கிராமத்து அடியவர்களுடன் மாத்திரமன்றி அயற் கிராமத்தவர்கள், புலம்பெயர் தேசத்து அடியவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் மாலை-06.30 மணியளவில் விசேட வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதரராய் உள்வீதி உலா வரும் திருக்காட்சியும், அதனைத் தொடர்ந்து அழகிய பூந்தண்டிகையில் வெளிவீதி உலா வரும் காட்சியும் நடந்தேறியது.
ஆலய வரலாற்றுச் சுருக்கம்
இவ் ஆலயம் 1832 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிற்றாலயமாக, தனிப்பட்ட வழிபாட்டுக்குரிய ஆலயமாக இருந்து வந்த நிலையில் வியாகேச ஐயர் நாகேந்திரன் என்பவரால் ஆதரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மண் சுவரினால் ஆக்கப்பட்ட இவ் ஆலயம் தாவடியூர் குமாரவேலர் இராசகாரியர் கற்கோயிலாகக் கட்டி ஆலய வளர்ச்சிக்கு முதன்முதலாக அடிகோலினார்.
இவ் ஆலயம் அமைந்த காணி 1855 ஆம் ஆண்டு பொதுப் பயன்பாட்டுக்காக வேதவிநாயகர் ஆலயத்தின் பெயரில் தர்மசாதனம் செய்யப்பட்டது. 1855 ஆம் ஆண்டிலிருந்து 1894 ஆம் ஆண்டு வரை குமாரவேலர் இராசகாரியாரால் கோயில் பரிபாலிக்கப்பட்டு அவரின் பின்னர் இராசகாரியர் நமசிவாயம் பிள்ளையும் (1894- 1908), அவரின் பின் அவரின் சகோதரி சதாசிவம் சிவக்கொழுந்துவும், அவரது பிள்ளைகள் சதாசிவம் சோமசுந்தரம், சதாசிவம் ஆறுமுகம் ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 28 பேர் கொண்ட நிர்வாகசபை ஏற்படுத்தப்பட்டுப் பொதுக் கோயிலாகப் பரிபாலிக்கப்பட்டு வருதாயிற்று.
1932 ஆம் ஆண்டில் இவ் ஆலயத்தில் மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு 1937 ஆம் ஆண்டில் வேதவிநாயகருக்கெனக் கட்டுத் தேரொன்று உருவாக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டில் விநாயகப் பெருமானுக்கு ஆவணி மாதம்-25 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற கும்பாபிஷேகம் தொடர்பான ஆவணப் பதிவுகள் எவையும் இல்லை. இவ் ஆலயம் ஊரவர்களின் பங்களிப்புடன் வளர்ச்சி கண்டு 1968 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு விநாயகருக்கு இராஜகோபுரமும், மணி மண்டபமும் அமைக்கப்பட்டு 06.02.1980 இல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. இக் காலப் பகுதியிலேயே மஹோற்சவ பட்சம் வைகாசி பெளர்ணமித் தீர்த்த உற்சவமானது சித்திரை மாதத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தைத் தேர்த் திருவிழாவாகக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது.
இதன்பின்னர் கிராமத்தவர்களின் பங்களிப்புடன் இன்றுவரை ஐந்திற்கும் மேற்பட்ட கும்பாபிஷேகங்களைக் கண்டு இவ் ஆலயம் படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது பெருவளர்ச்சி கண்டுள்ளது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்றுப் பேரழகுடன் காட்சியளிக்கிறது.
(காணொளி:- செ.ரவிசாந்)