யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) இரவு-10.55 மணியளவில் மோட்டார்ச் சைக்கிளில் சென்ற இளைஞன் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி இளைஞன் தனது வேலை முடித்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீடு நோக்கிக் காங்கேசன்துறை வீதி, மருதனார்மடம் சந்தியால் மோட்டார்ச் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில் மானிப்பாய்- கோப்பாய் வீதியில் உடுவில் பக்கமாகவிருந்து மிகவும் வேகமாகப் பயணித்த வெள்ளைநிறக் காரொன்று சடுதியாக மருதனார்மடம் சந்தி கடந்து உரும்பிராய் நோக்கிச் செல்ல முயற்சித்துள்ளது. இரவின் அமைதியில் காரின் சத்தத்தை தனக்குள் உள்வாங்கி சுதாகரித்துக் கொண்ட இளைஞன் மோட்டார்ச் சைக்கிளைச் சடுதியாக மறுபக்கம் திருப்பியமையால் குறித்த இளைஞன் காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பியுள்ளார்.
இதேவேளை, மருதனார்மடம் சந்தியில் பொலிஸார் இல்லாமையையும், சன நடமாட்டம் வெகுவாகக் குறைவடைந்திருந்தமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கார்ச் சாரதி குறித்த சம்பவத்தின் பின்னரும் அங்கு நிற்காமல் காரை வேகமாகச் செலுத்திச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.