16 வயதுப் பெண்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி: தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன்!

ஐக்கிய இராச்சியத் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தால் 16 வயதுப் பெண்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனானது.

மேற்படி தொடரின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மாலை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் பல நிமிடங்கள் சமபலத்துடன் மோதிய போதிலும் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை கல்ஷிகா இரு கோல்களைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியாட்டத்திலும் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியின் ஆதிக்கம் மேலோங்கிய போதிலும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியினர் மிகச் சிறப்பாக ஈடு கொடுத்து விளையாடினர். எனினும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை கல்ஷிகா மீண்டும் இரு கோல்களைப் பதிவு செய்ய ஆட்டநேர முடிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.