யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு தினங்கள் இடம்பெறவுள்ள முக்கிய சர்வதேச மாநாடு

நனோ தொழில்நுட்பம் உலகின் பல்வேறு துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய தொழில்நுட்பமாக உருவாகி வருகிறது. குறிப்பாகத் தூய சக்தி மற்றும் சுகாதாரத் துறைகளில் நனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், 2023 ஆம் ஆண்டு இந்திய கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு நாளை வியாழக்கிழமை (27.03.2025),  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (28.03.2025) ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.  

நோர்வே நாட்டு உயர்கல்வி, ஆற்றல் அபிவிருத்தி இயக்குனரகத்தின் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தாலும், இந்திய கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனத்தினாலும், மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்தாலும் இம் மாநாடு கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தூயசக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான நனோ தொழில்நுட்பம் தொடர்பில் பணிபுரியும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களிடையே நனோ தொழில்நுட்ப அறிவியல் அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு முக்கிய தளமாக இவ் மாநாடு அமையும். தூயசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான அதிநுட்பத் திறனைப் பயன்படுத்துவதிலுள்ள சவால்களை நிவர்த்தி செய்வது மாநாட்டின் கருப் பொருளாகும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். ரவிராஜன் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழக பேராசிரியர்.தயாளன் வேலாயுதபிள்ளை ஆகியோர் மாநாட்டின் தலைவர்களாகச் செயற்படுகின்றனர். 

இம் மாநாடு, இந்தியா, நோர்வே, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 35 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 160 இற்கும் மேற்பட்ட சர்வதேசப் பங்கேற்பாளர்கள் உட்பட 350 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துள்ளது. இலங்கையில் அமைந்துள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுள்ள அறிஞர்களின் பங்களிப்பும் இதில் அடங்குமென மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.