ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் பவனி மகாசிவராத்திரி நன்னாளான கடந்த புதன்கிழமை (26.02.2025) மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
காலை-09.15 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரப் பெருமான், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் உள்வீதியில் திருநடனத்துடன் எழு ந்தருளி உலா வந்தனர். முற்பகல்-11.45 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் ஆரோகணித்தனர். அதனைத் தொடர்ந்து சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் பெருவீதியில் முத்தேர்களின் பவனி ஆரம்பமாகியது. இவ் ஆலய முத்தேர் பவனியில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.