தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் சட்டவிரோதக் கைதுகள்: நீண்டநாட்களின் பின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்திக் கடந்த- 2023 ஆம் ஆண்டு மேமாதம்- 23 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின் போது பலாலிப் பொலிஸாரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுச் சட்டவிரோதக் கைதுகள் இடம்பெற்றதாகத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட எட்டுப் பேரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் பலாலிப் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும், காரணங்கள் எதுவுமின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தால் குறித்த முறைப்பாட்டுக் கோவைகள் யாழ் பிராந்தியக் காரியாலயத்திலிருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக விசாரணைகள் எதுவுமின்றிக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந் நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்புக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21.03.2025) காலை-09.45 மணி முதல் நண்பகல்-11.30 மணி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விசாரணையில் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தவிர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர்  தீபன் திலீசன், கட்சியின் செயற்பாட்டாளர்களான சுதாகரன், கோபிநாத், திருமதி.வாசுகி சுதாகரன், ராஜி, கலைவாணி சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். எதிர்மனுதாரர்களான பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நயனகித் மற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் விசாரணையின் போது முன்னிலையாகியிருந்தனர்.      

பலாலிப் பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள நிலையில் ஜனநாயக வழியில் போராடுகின்ற மக்களைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் சட்டத்தைக் கையிலெடுத்து மிகக் காட்டு மிராண்டித்தனமாக மக்களை இழிவாக நடாத்தும் நோக்குடன் போராட்டத்தை அடக்குகின்ற முயற்சியில் பலாலிப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்ததாக விசாரணையின் போது பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.                    

இந் நிலையில் மேலதிக எழுத்துமூலச் சமர்ப்பணங்களுக்காக எதிர்வரும் மேமாதம்-15 ஆம் திகதிக்கு குறித்த முறைப்பாடு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் காணொளி உள்ளிட்ட தமது தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியுமென மனித உரிமை ஆணைக்குழுவினரால் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.  
     
இதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது  இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே விசாரணைகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.