ஏப்ரல் மாதம்- 22, 23, 24 ஆம் திகதிகளில் அஞ்சல்மூல வாக்களிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 22 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், ஏப்ரல் மாதம்- 23,24 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும், ஏப்ரல் மாதம்-28,29 ஆம் திகதிகளில் தவறவிட்ட வாக்காளர்களுக்கான  அஞ்சல்மூல வாக்களிப்பு மீள நடைபெறவுள்ளதாகவும் யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும், யாழ்.மாவட்டப் பதில் செயலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,                            

அஞ்சல் மூல வாக்களிப்புக்காகப் பருத்தித்துறை நகர சபைக்கான  463 வாக்குச்சீட்டுப் பொதிகளும் வேலணைப் பிரதேச சபைக்கான 305 வாக்குச்சீட்டுப் பொதிகளும் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய  உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்குச் சீட்டுப் பொதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்காலத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்தல் கடமைகளில் ஒருவரின் கவனயீனமான விடயங்களால் ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அவர் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற அனைவரையும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இந்தச் செயலமர்வில் உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான கடமைகள் தொடர்பாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.