50 வருடங்களுக்குப் பின்னர் மாவிட்டபுரம் கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்: பெருமளவு அடியவர்கள் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (11.04.2025) காலை-08.07 மணி முதல் முற்பகல்-10.09 மணி வரையுள்ள சுப வேளையில் பெருமளவு அடியவர்களின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

பிரதான கும்பங்கள் பேரிகை, மங்கள வாத்திய முழக்கத்துடன் இரண்டு சிறிய தேர்களில் யானைகளின் அனைவகுப்புடன் வெளிவீதியில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க எடுத்துவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. தமிழ்நாட்டின் புகழ்பூத்த தீட்சிதர்கள் மற்றும் இலங்கையின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்த சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகக் கிரியை வழிபாடுகளை நிகழ்த்தினர். அத்துடன் சிவாச்சாரியார்கள் கெளரவிப்பு, கும்பாபிஷேகச் சிறப்பு மலர் வெளியீடு என்பனவும் இடம்பெற்றன.  

மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை-04.32 மணியளவில் ஆரம்பமானதுடன் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரையான நான்கு தினங்களுக்கு இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.