சமூகப் பிறழ்வுகளைக் குறைக்க வடக்கு ஆளுநரின் ஆலோசனைகள்!

இன்றைய இளைய சமூகத்தின் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றமைக்கு, விளையாட்டுக்களில் பங்கேற்காமை பிரதான காரணமாகும். வட்டுக்கோட்டைப் பிரதேசத்து இளையோர் அதிகளவில் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதால் சமூகப் பிறழ்வுகளில் ஈடுபட்டதாக எந்தவொரு முறைப்பாடும் இல்லை என உங்கள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சொல்லியிருந்தார். உண்மையில் விளையாட்டுக்களிலும், கலைச் செயற்பாடுகளிலும் இளையோர் நாட்டம் செலுத்தினால் சமூகப் பிறழ்வுகள் எவ்வளவோ குறைவடையுமென வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய புதுவருட விளையாட்டு விழா – 2025 இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15.04.2025) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் தொலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது எனவும் அவர் வேதனை வெளியிட்டார்.