கலைகள் ஊடாக இளையோரை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்? என்பது தொடர்பில் ஆராயும் முதற்கட்டக் கலந்துரையாடல் யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22.04.2025) இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி, மூத்த கலைஞர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களிடமிருந்து இந்தச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது பொருத்தமானது எனத் தெரிவித்த அவர்கள் அதன் ஊடாக அந்தச் சமூகங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தனர். கடந்த காலங்களில் தம்மால் அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகள் அதில் அடையப்பட்ட வெற்றிகள் தொடர்பிலும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாகச் செய்வதன் ஊடாகவே சாத்தியமாகும் எனவும் சுட்டிக்காட்டினர். இவற்றை முன்னெடுப்பதற்கான துறைசார் அரச அதிகாரிகள் உள்ளபோதும் இந்த விடயங்களை அவர்கள் அர்ப்பணிப்புடன் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.
அதேவேளை, இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும், இன்றைய மாணவ சமுதாயத்தின் எண்ணவோட்டங்களின் சிதறல்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டினார்.
முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து கலைகள் ஊடாக இளையோரை வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்தப் பரீட்சார்த்த முயற்சியின் அடிப்படையில் ஏனைய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முடியுமென இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார். இந் நிலையில் முன்னோடித் திட்டத்துக்கான பாடசாலைகளைச் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் கல்வி அமைச்சின் செயலர் ஆகியோர் அடையாளப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
.