இவர்களா எல்லாச் சமூகங்களையும் இணைக்கப் போகிறார்கள்?

மாற்றம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தேர்தலுக்கு முன்னர் ஒரு கதையையும், தேர்தலுக்குப் பின்னர் இன்னொரு கதையையும் சொல்வார்கள். இன்றைய நினைவேந்தலை நடைபவனியுடன் கூடியதாக நடாத்த வேண்டாமென நீதிமன்றக் கட்டளை மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதி போன்றோரின் நினைவுகளையே இந்தச் சமூகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கக் கூடாதென நினைப்பவர்கள் மாற்றம் என்ற ரீதியில் எல்லாச் சமூகங்களையும் எவ்வாறு இணைப்பார்கள்? என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் புரிந்த அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (19.04.2025) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொதுநினைவுத் தூபியடியில் அனுஷ்டிக்கப்பட்ட போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளனர்.            

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 70 வருட அரசியல் இந்த மண்ணிலிருந்திருக்கிறது. அதில் 40 வருட அரசியல் ஜனநாயக ரீதியான அரசியலாகவும், 30 வருட அரசியல் யுத்தம் மிகுந்த அரசியலாகவும் இருந்திருக்கிறது. இந்த 70 வருட அரசியலை நாங்கள் மாற்றம் என்ற மாயச் சூழலுக்குள் புதைக்க நாங்கள் பார்க்கின்றோம். அடுத்தடுத்து நடக்கும் மூன்று தேர்தல்களும் மாற்றம் என்ற மாயைக்குள் புதைக்குமாகவிருந்தால், அதற்கு நாங்களும் ஏதோவொரு விதத்தில் காரணமாகவிருந்தால் 70 வருட எமது அரசியலும் நீர்த்துப் போகின்ற நிலையைத் தான் உருவாக்கும். 

நாங்கள் எந்தவொரு காலகட்டத்திலும் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களையோ அல்லது நாட்டுப் பற்றாளர்களையோ விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.