உங்களை வெளிப்படுத்துங்கள்: யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய நூல் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஊடகக் கழகம் நடாத்திய மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தாவின் "உங்களை வெளிப்படுத்துங்கள்" எனும் நூலின் அறிமுக நிகழ்வு நேற்று கடந்த புதன்கிழமை (09.04.2025) மாலை-03.15 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கழகத் தலைவர் தங்கராசா விதுஷன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் செல்வி. அருள்பிரகாசம் கிரிஜா நூல் அறிமுகவுரையை ஆற்றினார். நூலாசிரியர் கணபதி சர்வானந்தா நூலை வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

ஊடகக் கற்கைகள் துறையின் நான்காம் வருட மாணவன் முருகையா தவக்குமார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட முதலாம் வருட மாணவன் தவேஸ்வரன் அபிநாத் ஆகியோர் நூல் பற்றிய மாணவர்கள் பார்வை உரைகளை ஆற்றியதுடன் நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நூறு வரையான நூல்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.  

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறையின் தலைவர் கலாநிதி தி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், இணுவில் கலை இலக்கிய வட்டத் தலைவருமான  கந்தையா ஸ்ரீகணேசன்,  வலிகாமம் தெற்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் இ.மயூரநாதன், கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் முன்னாள் தலைவர் கனகலிங்கம் தர்மசேகரன், இணுவில் அண்ணா தொழிலகத் தலைவர் ந.திவாகரன், தொழிலதிபர் குமார், உதயன் நாளிதழின் பிரதம ஆசிரியர் ரி.பிரபாகரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டனர். 

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)