தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற லலீசனுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்புக் கௌரவம்

இந்தியா தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து அண்மையில் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான விருது பெற்றுக் கொண்ட சொற்பொழிவாளரும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வருமான செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளாலும், ஆச்சிரமத் தொண்டர்களாலும் சிறப்பாகப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். 

இன்று வெள்ளிக்கிழமை (18.04.2025) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆச்சிரமத்தினர் சார்பில் பாராட்டுரையை சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆற்றினார்.

ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் நினைவுச் சின்னம் வழங்கி மதிப்பளித்தார். ஆச்சிரமத் தொண்டர்களும், அடியவர்களும் லலீசனுக்குப் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் கௌரவித்தனர். 

இதேவேளை, சொற்பொழிவாளர் லலீசன் 1998 ஆம் ஆண்டு பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் முதன் முதலாகப் பொதுவெளியில் தனது சொற்பொழிவை ஆரம்பித்துத் தற்போது இந்த உயர் நிலையை அடைந்துள்ளார் எனச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் பாராட்டுத் தெரிவித்தார்.