திருவாசகமே வாழ்வாக வாழ்ந்து காட்டிய பண்டிதர். வைத்தீஸ்வரக் குருக்கள்


காரைநகர் வைத்தீஸ்வர ஐயாவின் பெருமைகளைச் சிந்திக்கச் சிந்திக்க அவர் பெருமை ஆழங் காண இயலாமலும், அவரால் விளைந்த பயன்கள் அளவில் அடங்காதனவாகவும் பெருகுகின்றன.  நூற்றொருவர், ஆயிரத்தொருவர், கோடிக்கொருவர் என்று ஒளவையார் கணித்த கணக்கிலும் விளங்குகின்றார். அவர் செய்த பணிகள் அவர் அகப்படாது. அவரால் விளைந்த நலன்களை யாராலும் வரையறை செய்ய இயலாதுள்ளது.  

பிரபலமான பலருமறிந்த அருஞ்செயல்களைப் பட்டியலிட்டுத் திருப்தியடைந்த பின் சந்திக்கும் ஒருவர் அவரால்தான் மனிதனாக இருக்கிறேன் என்கிறார் இன்னொருவர். என் இட்டல், இடைஞ்சல்களிலெல்லாம் அவரிடம் சென்று ஆறுதல் பெறுவேன். இன்று என்செய்வதென்று தெரியவில்லை என்கிறார். பொருள் தேடுவதிலும், புகழ் தேடுவதிலும் ஊக்கமாக இருந்த என்னைப் பக்திவழியில் முன்னேற வைத்த ஐயாவைப் போல் உலகில் யாராவது இருக்கமுடியுமோ என்கிறார் வேறொருவர்  

சுமார் எழுபத்தைந்து, எண்பது வருடங்களாகக் காரைநகரிலும், ஈழத்துச் சிதம்பரத்திலும் நிகழ்ந்த கண்ணியமான, பெறுமதியான, முன்னோடியான கருமங்கள் அனைத்திலும் வைத்தீஸ்வர ஐயாவின் பங்களிப்பு,  ஊக்குவிப்பு கணிசமான அளவு அடிப்படையான தன்மை தெளிவாகத் தெரிகிறது.
  
தேவாமிர்தத்தை மட்டுமன்றி கற்பகம் காமதேனு உச்சைசிரவம் ஐராவதம் மகாலக்குமி முதலிய பல தேவச் செல்வங்களை உதவியபின்னும் காத்தற் கடவுளான திருமால் பள்ளிகொள்ளும் புனிதம் மிக்கதாகப் பாற்கடல் விளங்குவது போல் வைத்தீஸ்வர ஐயா விளங்குகிறார் என்று சொல்லத் துணியலாம் போல அவரது தன்மையுள்ளது.  

பாற்கடல் உதவிய பல தெய்வீகச் செல்வங்களுள் முதன்மையானதாக தேவாமிர்தம் விளங்குவது போல் வைத்தீஸ்வர ஐயா தோற்றுவித்த மணிவாசகர்சபை விளங்குகின்றது. காரை வளர்ச்சிக்கழகம் ஈழத்துச் சிதம்பர புராணம் முதலியவை கற்பகதரு காமதேனு முதலியன கொண்டாடத் தக்கனவாயுள்ளன. பாற்கடலில் உள்ள அலையும் துளியும்போல அவரது பிறபணிகள் கணக்கின்றி உள்ளன  

மணிவாசகர் சபையின் சேவைகளால் ஈழத்துச் சிதம்பரத்துக்கும் , காரைநகருக்கும் அப்பாலும் திருவாசகம் தேனாகச் சுவைக்கும் நிலை உருவாகி உள்ளது எனலாம். மணிவாசகர் சபை ஆரம்பித்துப் பலன் செய்தன் விளைவாகவே காரைநகர் பண்டிதமணி அருளம்பலவாணர் திருவாசகத்துக்கு அரிய உரை ஒன்றை எழுதி வெளிப்படுத்தியிருக்கிறார். காலத்துக் காலம் மணிவிழா மலர்கள் பல மலர்ந்து மணம் பரப்பியிருக்கின்றன.  

திருவெம்பாவை விழாக்காலத்தில் காரைநகர் சிவன் கோவிலில் நிகழும் மணிவாசகர் விழா, திருவிழாவின் சிறப்பம்சமாக விளங்கியது மட்டுமன்றி காரைநகர் சிவன் கோவிலை ஈழத்துச் சிதம்பரம் எனப் பிரகாசிக்க இருந்திருக்கிறது எனக் கருதக்கூடியதாக உள்ளது. காரணமாக காரைநகரும், வைத்தீஸ்வர ஐயாவும் செய்த தவப்பயனாக மணிவாசகர் சபைக்கு யோகர் சுவாமிகளின் ஆசியை நாடும் சந்தரப்பத்தை உண்டாக்கியிருக்கின்றன.

யோகர் சுவாமிகள் மணிவாசகர் சபைக்கு ஆசிவழங்கும்போது வேண்டத்தக்கது அறிவோய் நீ எனத் தொடங்கும் திருவாசகத்தைப் பாடி வாழ்த்தி ஆசி கூறியிருக்கின்றார்.  திருவாசகத்தில் அதிக ஈடுபாடில்லாதவரும் நன்கு அறிந்த திருவாசகப் பாடலே வேண்டத்தக்கது எனத் தொடங்கும் பாடலாகும். இப் பாடலின் நாலாவது அடியாகிய வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்றன் விருப்பு அன்றே என்பது பலரும் பெரும்பாலானவரும் நான் விரும்பும் விருப்பங்கள் எல்லாம் விருப்பத்தால் எனக்கு உண்டான விருப்பங்களே என்று கருதி தமது ஆசைகளுக்கெல்லாம் சிவபெருமானே பொறுப்பானவர் என நம்பி ஆறுதலும், வலிமையும் அடைகின்றனர்.

ஆனால், இவர்கள் நம்புவதற்கு மாறாக இத் திருவாசகப் பகுதிக்கு மாணிக்கம் போன்ற அரிய நுண்ணிய கருத்து உள்ளது. சிவபெருமானே நான் விரும்பும் விருப்பங்கள் எல்லாம் உன் விருப்பத்தாலேயே எனக்கு உண்டாகியிருக்கின்றன என்ற கருத்து இத்திருவாசகப் பாடலின் மூன்றாவது அடியாகிய வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்' பகுதியிலேயே அடங்கி விடுகின்றது. 
 
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்றன் விருப்பு அன்றே என்பதற்கு பெருமானே நான் நானாக விருப்பது என்னவென்றால் உன்னை
விரும்புதல் ஒன்றே யாம் சிவபகதி பண்ணும் ஒன்றையே நான் விரும்புகின்றேன்.  இப்படி இப் பகுதியை அழுத்தமாக சிந்திக்க ஒரு காரணம் உண்டு  
மணிவாசகர் சபையைத் தோற்றுவித்து பலரையும் திருவாசகத்தில் ஈடுபடுத்தி மகிழ்தலோடு நின்றுவிடாது தான் முற்றுமுழுதாகத் திருவாசகத்தில் ஈடுபட்டு
திருவாசகத்தைச் சுவைத்தவர் ஐயா அவர்கள்.
  
முதுமை காரணமாகச் சோர்வும், செயற்பாட்டுத் தளர்வும் அவரைப் பிற விடயங்களிலிருந்து விலக்கித் திருவாசக பாராயணம், திருவாசகச் சிந்தனை என்பவற்றில் தோயச் செய்ததை அறிய முடிகின்றது. தனது இருபத்திநாலு வயசிலே திருவாசகத்தில் ஈடுபட்ட ஐயா அவர்கள் அத் திருவாசக ஈடுபாட்டைப் பிறர்க்கு உண்டாக்கி சபையைத் தோற்றுவித்திருக்கிறார். பிறருடன் சேர்ந்தும், தனித்தும் திருவாசகத்திலே திளைத்திருக்கிறார். மனம், வாக்கு, காயம் எனும் முக்கரணங்களுக்கும் அப்பால் தன் உயிர் நிலையிலேயே இவர் திருவாசகமயமாக விளங்கியிருக்கிறார் என்ற உண்மையை இவர் தன் வாழ்வின் கடைசி நேரத்தில் தன் மகளை நோக்கி ஐயோ... ஐயோ....என்று கூறாதே சிவனே.... சிவனே.... என்று கூறு என்று கூறியதனால் அறிய முடிகின்றது. தெளிய முடிகின்றது. 

அரகரா சிவசிவா என்று கூறு என்னாது சிவனே சிவனே என்று கூறு என்றமை திருவெம்பாவையில் உள்ள சிவனே சிவனே என்று ஓலமிடினும் உணராய் உணராய் காண் என்ற மாணிக்கவாசகத்தினை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த நிகழ்வைப் பற்றி நுணுகி ஆராய்ந்தால் ஒரு உண்மை வெளிப்படும். தன் திருமணத்துக்கு வந்தவர்களுடன் தானும் சிவச்சோதியில் பிரவேசிக்க அமைந்த சந்தர்ப்பத்தில் தான் இவ் உலகை விட்டுச் சிவச்சோதியில் கலந்தபின் இவ் உலக தேவஉலக மக்களுக்கு வேண்டிய உறுதி மொழியைச் சம்பந்தசுவாமிகள் வழங்கிய தன்மையிலே திருஞானசம்பந்தர் காதலாகி என்னும் பதிகத்தைப் பாடினார் என்று சேக்கிழார் பாடுகிறார். இந்தச் சேக்கிழார் பாணியில் வைத்தீஸ்வர ஐயா தன் மகளை முன்னிட்டுத் தனக்கு முன்னுள்ள சைவத்தமிழ் உலகத்தைப் பார்த்து ஐயோ... ஐயோ.... என்று கூறாதீர்கள். சைவத்தமிழுலகிற்கான இறுதி உறுதி மொழியாகச் சிவனே... சிவனே...என்று  கூறுங்கள் எனக் கூறிச் சிவபதமடைந்தார் எனக் கொள்வதே முறை. வைத்தீஸ்வர ஐயாவைப் போலவே வேறு பல பெரியோர்களும் தம் கடைசி வார்த்தையாக நிலையான கருத்தை வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.
  
சம்பந்தர் காதலாகிப் பதிகத்தை வழங்கினார். வேறு ஒரு மகான் சுயநலமுள்ளவனாக இராதே என்றிருக்கிறார். வேறு ஓர் அரசியல் தலைவர் நீ என்ன செய்கிறாய்? என்றிருக்கிறார். இப்படியானவர்கள் வரிசையில் ஐயா எங்களுக்கு வழங்கிய மாணிக்கவாசகம் பாற்கடலின் தேவாமிர்தத்திலும் மேலானது எனத் துணியலாம். 

( பண்டிதர், கலாநிதி.க.வைத்தீஸ்வரக் குருக்கள் அமரராகி வெள்ளிக்கிழமையுடன் (25.04.2025) பத்தாவது ஆண்டு நினைவுநாளாகும். அதனை முன்னிட்டு இச் சிறப்புக் கட்டுரையை வெளியிடுகின்றோம்.)        

ஆக்கம்:-
பண்டிதர் தி.பொன்னம்பலவாணர்
(சைவப்பிரகாசப் பேரவையின் ஸ்தாபகர் )