யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இரு நிகழ்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் 'கே.கே.எஸ் வீதி அன்றும் இன்றும் -- வண்ணார்பண்ணை அத்தியாயம்' எனும் தலைப்பில் ஒளிப்படக் காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கும் நிகழ்வும்,  'வேர்களை விற்றல்' எனும் அரும்பொருட்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் பற்றிய ஒர் சுவடியாக்கத் தொகுப்பு வெளியீடும் செவ்வாய்க்கிழமை (22.04.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட முக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக குறித்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.      

அதேசமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் பயிலும் இறுதிவருட மாணவர்களின் 'மரபுரிமை மாறும் தளம்'  எனும் காண்பியக் காட்சி நுண்கலைத் துறையின் கலைக்கூடத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் காண்பியப் படைப்பாளிகளின் தெரிவு செய்யப்பட்ட படைப்புக்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக் காட்சி மரபுரிமைசார் இடங்கள், பொருட்கள், பயிற்சிகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் பற்றியதாக அமையவுள்ளது.

இரு காட்சி நிகழ்வுகளும் நாளை முதல் எதிர்வரும்- 26 ஆம் திகதி சனிக்கிழமை வரை முற்பகல்-10 மணி முதல் மாலை-04.30 மணி வரை நடைபெறுமெனவும், குறித்த காட்சிகளைப் பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பார்வையிட்டுப் பயன்பெற முடியுமெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.