நல்லூர்க் கந்தன் ஆலயச் சூழலில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயச் சூழலில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை நான்காம் வட்டார உறுப்பினராகத் தெரிவான சந்திரசேகரம் இராஜகுமார் வியாழக்கிழமை (15.05.2025)  மாலை-04 மணியளவில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனை நல்லூரில் அமைந்துள்ள யாழ்.மாநகரசபையின் அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்துக் கோரிக்கைக் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம் சைவமக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடாத்தப்படுவது குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள். 

சைவமக்களின் ஆன்மீக உளவியலுக்கு இடையூறை ஏற்படுத்தும் குறித்த மாமிச உணவகத்தில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.