சர்வதேச அன்னையர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(11.05.2025) கொத்மலைப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 35 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் ஒன்பது மாதத் தன் பெண் குழந்தையைக் காக்கப் பல மணிநேரங்களாகப் போராடிய மீரியபெத்தையைச் சேர்ந்த 45 வயதான காசிராஜன் தனலட்சுமி (வயது-45) என்ற தாய் இறுதியில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். இந்த விபத்தில் குறித்த குழந்தையின் தந்தையும் உயிரிழந்துள்ளார். எனினும், ஒன்பது மாதக் குழந்தையும், குழந்தையின் இரு சகோதரர்களும் உயிர் பிழைத்துள்ளனர். நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமாக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
500 அடி பள்ளத்தில் அரச பேருந்து தலைகீழாக கவிழ்ந்து பல தடவைகள் சுழன்றடித்துச் சுக்குநூறான போதும் தன் பச்சிளம் குழந்தைக்கு ஒன்றும் ஆகாமல் முழுமையான அரவணைப்பையும், பாதுகாப்பையும் வழங்கிக் காப்பாற்றிய கடவுளுக்கு நிகரான தாய்க்குச் சலூட்! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒப்பற்ற உங்கள் தியாகத்திற்குத் தலை வணங்குகின்றோம்.