சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு!

நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும், சுவாச நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குச் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட மருத்துவர் அத்துல லியனபத்திரன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானது. சுவாச நோய்கள் தொடர்பில் முதியோர், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் விசேட கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டோர் சுவாசத் தொற்றுகளுக்கு உள்ளாகும் போது உடனடியாகச் சிகிச்சை பெறுவது அவசியம். 

சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட மருத்துவர் அத்துல லியனபத்திரன மேலும் குறிப்பிட்டார்.