வாழ்வின் இறுதிவரை இலக்கியத்தை அதிகம் நேசித்த இணுவில் மூதறிஞர் சிவலிங்கம் தொடர்பான அனுபவப் பகிர்வுகள்!

இணுவில் கிழக்குப் பகுதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூஷணம் மூதறிஞர் மூத்ததம்பி சிவலிங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) முற்பகல்-10.15 மணியளவில் தனது 92 ஆவது வயதில் யாழ்.இணுவிலில் காலமானார்.

 
முப்பது வருடங்களாகக் கிராம அலுவலராகச் சிறப்பான சேவைகளாற்றிய இவர் தன் வாழ்நாளில் 33 நூல்களை எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். 34 ஆவது நூலாக ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் தொடர்பான நூலை இவர் எழுதி நிறைவு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம். குறிப்பாக நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தொடர்பான அரிய வரலாற்று நூலையும் எழுதி வெளியிட்டுப் பலரது பாராட்டைப் பெற்றுள்ளார். இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் ஸ்தாபகரும், முன்னாள் பொறுப்பாசிரியருமான இவர் இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தின் மூத்த உறுப்பினரும், இணுவில் அறிவாலயத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெருந்தகையுமாவார்.

தனக்கு வரும் வருமானத்தை முழுமையாக நூல்கள் வெளியிடப் பயன்படுத்திய இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் தொடர்பான வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்தவர்.      

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (02.05.2025) முற்பகல்-10 மணியளவில் இணுவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இணுவில் சைவத் திருநெறிக் கழகத் தலைவர் கெஜரெத்தினம் தவராசா தலைமையில் அஞ்சலி உரைகள் நடைபெற்றது. யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கு.சண்முகநாதன், உள, மருத்துவ, சமூக சேவையாளர் ந.ஞானசூரியர், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் செ.உதயகுமார், கோண்டாவில் வடமேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.தேவிகபாலன், இணுவில் இளந்தொண்டர் சபையின் அமைப்பாளர் ந.பரமேஸ்வரன் ஆகியோர் அஞ்சலி உரைகள் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து அன்னாரின் இறுதி யாத்திரை ஆரம்பமாகிப் பிற்பகல்-01 மணியளவில் காரைக்கால் இந்துமயானத்தில் பூதவுடல் தீயுடன் சங்கமமானது. 

இதேவேளை, தனது வாழ்வின் இறுதி வரை இலக்கியத்தையும், வாசிப்பையும் அதிகளவில் நேசித்த மூதறிஞர் மூத்ததம்பி சிவலிங்கம் தொடர்பில் அவரது இறுதி அஞ்சலி மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன்,  இணுவில் சைவத் திருநெறிக் கழகத் தலைவர் கெஜரெத்தினம் தவராசா, உள, மருத்துவ, சமூக சேவையாளர் ந.ஞானசூரியர் மற்றும் மூதறிஞர் சிவலிங்கத்தின் சகோதரர் மூத்ததம்பி பரமலிங்கம் (பொட்டைய்யா) ஆகியோர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.