வல்வெட்டித்துறையில் உயிர்கள் காக்க கைகொடுத்த 74 பேர்!

வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் 80 ஆவது அமுதவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை ஆகியன வல்வை 21 நண்பர்கள், வல்வை 1977 லண்டன் நண்பிகள், நலன்விரும்பியொருவர் ஆகியோரின் அனுசரணையில் நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03.15 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தவிசாளர் திருமதி.தவமலர் சுரேந்திரநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 15 பெண்கள், 59 ஆண்கள் என 74 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை,  மேற்படி இரத்ததான முகாம் தொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய கருத்துக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.