குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்-2025 நாளை ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) காலை-07 மணி முதல் காலை-08.10 மணி வரையுள்ள சுப வேளையில் சிறப்புற நடைபெறவுள்ளது.  

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (10.07.2025) அதிகாலை-05.30 மணியளவில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஆலய மகா கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமானது. இன்று சனிக்கிழமை (12.07.2025) காலை-09.20 மணியளவில் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை-04 மணி வரை இடம்பெறவுள்ளதாக  ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 

மகா கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்கும் அடியவர்களைக் கருத்திற் கொண்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஆலயத்தில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, அடியவர்கள் விநாயகப் பெருமான், மூலாலயத்தில் அமைந்துள்ள மூலஸ்தான அம்பாள், கொடிமரத்தில் தம்பப் பிள்ளையார் அதனைத் தொடர்ந்து நந்தி, பலி பீடம், சந்தான கோபாலர், சப்த கன்னிகள், முருகப் பெருமான், நவக்கிரகங்கள், நாகதம்பிரான், வைரவர், வெளிப்புறத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு என்ற ஒழுங்கு முறையில் எண்ணெய்க் காப்புச் சாத்தி வழிபடுமாறு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் கேட்டுள்ளார்.