யாழில் பிரத்தியேகக் காட்சி- ஏழு நாடகங்களும் பதிவுகளும் நூல் வெளியீட்டு விழா

எங்கட புத்தகங்கள் நிறுவனத்தின் வெளியீடான நாடகர் க.பாலேந்திராவின் "பிரத்தியேகக் காட்சி"- ஏழு நாடகங்களும் பதிவுகளும் எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (12.07.2025) மாலை-03.30 மணியளவில் அம்மன் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கைலைநாதன் திலகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் எங்கட புத்தகங்கள் இல்ல நிறுவுனர் குலசிங்கம் வசீகரன் நூலின் வெளியீட்டுரையை ஆற்றுவார். நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கந்தையா சிறீகணேசன், தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சோ.தேவராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ரதிதரன் கார்த்திகேசு ஆகியோர் கருத்துரைகள் நிகழ்த்துவர்.  

நூலாசிரியர் பாலேந்திராவும், ஆனந்தராணியும் வழங்கும் அரங்க நினைவலைகள் நிகழ்வும் நடைபெறும். குறித்த நிகழ்வில் நாடகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.