முதுபெரும் கூட்டுறவாளர் நல்லதம்பி சிவலிங்கத்தின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை (10.07.2025) அவர் பிறந்த யாழ். குப்பிழான் மண்ணில் அக்கினியுடன் சங்கமமானது.
முன்னாள் சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளரும், குப்பிழான் வீரபத்திரர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்னாள் தலைவருமான இவர் கடந்த திங்கட்கிழமை (07.07.2025) தனது 84 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை-09 மணியளவில் வீரபத்திரர் கோவிலடி, குப்பிழான் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டம் குப்பிழான் மண்ணின் சமூக சேவையாளரும், ஆசிரியருமான தில்லையம்பலம் சசிதரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் குப்பிழான் மண்ணின் ஓய்வு நிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதன், பேராதனைப் பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளரும், ஆசிரியருமான சைவப்புலவர் ஏ.அனுசாந்தன், குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் சின்னராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று முற்பகல்-11.45 மணியளவில் குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
(செ.ரவிசாந்)