இன்று 76 ஆவது அகவை காண்கிறார் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) 76 ஆவது அகவை காண்கிறார்.

சந்நிதி முருகன் ஆலயச் சூழலில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வராகவிருந்து  நீண்டகாலமாகத் தினம்தோறும் அன்னதானப் பணி முன்னெடுத்து வரும் மோகனதாஸ் சுவாமிகள் இல்லையெனாது வருவோருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வருபவர். வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் உதவி வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் செல்வச் சந்நிதி முருகன் பெருவிழாக் காலத்தில் தினமும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் முழு வீச்சாய்ச் செயற்பட்டு வருபவர்.    

சந்நிதியான் ஆச்சிரமம் மூலம் ஆன்மிகம், சமூகம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிப் நீண்டகாலமாக ஞானச் சுடர் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகின்றது. இதற்குக்  காரணமாக விளங்குபவர். 

அதுமாத்திரமன்றி வட- கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வரின் நேரடி நெறிப்படுத்தலில் கடந்த பல வருடங்களாக வாழ்வாதார, கல்வி ஊக்குவிப்பு மற்றும் ஆன்மிகம் சார்ந்த பலதரப்பட்ட உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று 76 ஆவது அகவை காணும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளின் அளப்பரிய சைவ, சமூகப் பணிகள் தொடர உளமார வாழ்த்துகின்றோம்.