“போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா…? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்,” என்றவர் இங்கர்சால். வாசிப்பின் மகத்துவத்தை அவர் அப்படித்தான் உணர்ந்திருக்கிறார்.
“எனக்கு வேறு ஒரு சுதந்திரமும் வேண்டாம். வாசிப்பதற்குப் புத்தகத்தை மட்டும் அனுமதியுங்கள். அதுவே போதும்” என்று தான் அடைபட்டுக் கிடந்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டு கோள் விடுத்தவர் மறைந்த ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா.
வாசிப்புப் பழக்கமானது ஒரு மனிதனை அகமும், புறமும் புடம்போட வல்லது எனக் கண்டறிந்தவர்களே பின் நாளில் மாமேதைகளாகத் திகழ்ந்தார்கள் என வரலாறு சொல்லுகிறது. மாமனிதர்கள் என்று போற்றப்பட்ட பலரின் சுயசரிதத்தை வாசித்த போதெல்லாம் அவர்கள் வாசிப்பைத் தமது இடைவிடாத பழக்கங்களில் ஒன்றாய்க் கொண்டிருந்தது தெரியவருகிறது. அவர்கள் வாசித்தனர். வாசித்ததை தமக்குள் அடக்கிக் கொள்ளாது பலருக்கும் பயனளிக்கும் வகையில் உலகுக்கு உவந்தளித்துச் சென்றுவிட்டதையும் வாசிப்பதால் தான் நாம் அறிந்து கொள்ளுகிறோம்.
வாசிக்கப் பிடிக்கவில்லையா? அல்லது வாசித்துப் பழக்கமில்லையா? அல்லது வாசிப்பது பற்றி எவரும் உங்களுக்குச் சொல்லித் தரவில்லையா? பரவாயில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். சில நிமிடங்களுக்குப் புரட்டிக் கொண்டே இருங்கள். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு எழுத்தில் உங்கள் பார்வை நிலை கொள்ளும். அப்போது அந்தப் பத்தகத்தை மூடிவைத்து விடுங்கள். பின்னர் ஓரிரு தடவைகளுக்கு இப்படியே செய்து பாருங்கள். உங்களை அறியாது நீங்கள் வாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
இதுவரை புத்தகம் எதனையும் வாங்கவோ, வாசிக்கவோ சந்தர்ப்பம் கிட்டாத உங்களை நோக்கிப் புத்தகங்களை ஒருவர் கொண்டு வருவாரேயானால் அதுகூட ஒரு பாக்கியம் எனலாம். மக்கள் நலன் கருதி இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேசப் புத்தகத் திருவிழா-2025 இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் யாழ்.வர்த்தகத் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கிறது என்ற ஆரோக்கியமான விடயத்தைச் சொல்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். காரணம் அந்தப் புத்தகத் திருவிழாவால் பல நன்மைகள் நடைபெறப் போகின்றன.
வாசிப்பதால், மனிதம் என்ன வென்று அறியப்படலாம். மானுட நேயத்தைக் கற்றுக் கொள்ளலாம். சமூக அக்கறை மேம்படும். உறவுகள் நெருக்கமாகும். குடும்ப மட்டத்தில் நல்ல சிந்தனைகள் எழலாம். அதனால் குடும்பத்தில் வன்முறைகள் என்ன? என்று அடையாளப்படுத்தப்படும். குழந்தைகள் பற்றி அதிகம் அறிந்து கொள்ளலாம். இயற்கையை நேசிப்பீர்கள். அதனால் மரம் வெட்டுவதை நிறுத்துக் கொள்வீர்கள். காடழிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பீர்கள். காடு பாதுகாக்கப்பட்டு மழை பருவத்தே வரும். அதனால் வேளாண்மை பெருகும். அத்துடன் அரசுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அறிவீர்கள். அதனால் சரியானவர்களுக்கு வாக்களிப்பீர்கள். மொத்தத்தில் நாடும், வீடும் நலம் பெறும்.
சமூகத்தில் வாசிப்பென்ற விடயம் தூர்ந்து போயிருக்கிறதென்ற குற்றச்சாட்டைப் பலர் முன்வைத்துப் பேசுகின்றனர். ஆனால், வாசிப்பை மீளக் கட்டி எழுப்பக் காத்திரமான நடவடிக்கைகள் எதையாவது செய்திருக்கிறோமா? எதனையும் எவரும் செய்வில்லை என்பதையும் சமூக அக்கறையுள்ளவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே, மக்களிடையே வாசிப்பை நீங்களும் தூண்டிவிடலாம்.. அதனை உங்கள் அன்றாட நடவடிக்கைகளிலிருந்தே தொடங்கலாம். உங்கள் உறவுகளில் நடைபெறும் விழாக்களுக்குச் சொல்லும் போது மற்றைய பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பதிலாகப் புத்தகங்களை எடுத்துச் சென்று அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள், பார்க்கலாம். அவர்கள் உடனடியாக அதனைப் புரட்டிப் பார்க்காவிட்டாலும் எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டக் கூடும். அப்போது அதன் பலனை அவர்கள் அனுபவிக்கக் கூடும். தாத்தா வாங்கி வைத்த புத்தகங்களை அவரது பேரன் வாசித்த கதையும் உண்டு. இடைநடுவே நின்றவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து அதனைப் பாதுகாத்து அடுத்த சந்ததிக்குக் கொடுத்திருக்கின்றனர்.
எனவே, பரிசுப் பொருளாகப் புத்தகங்களைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் எடுக்க வேண்டியது. அத்தகைய புத்தகங்களைத் தெரிவு செய்யும் போது அவரவர் தேவைக்கும், தகுதிக்கும் ஏற்றவாறு புத்தகங்களைத் தேர்வு செய்வதுதான் இந்த முயற்சியிலே நீங்கள் வெற்றியடையக் காரணமாயிருக்கும். உதாரணமாகத் திருமணப் பரிசாகக் கொடுக்கின்ற புத்தகம் “நல்ல வாழ்க்கை” பற்றிய வழிகாட்டியாக இருக்கட்டும். சிறுவர் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கின்ற புத்தகம் ஒரு இலட்சியச் சிறுவன் பற்றியதாக இருக்கட்டும். கோயில் நிர்வாகத்தினருக்குக் கொடுக்கின்ற புத்தகங்கள் சமயம், ஆவணங்கள் மற்றும் கட்டடக்கலை சார்ந்த புத்தகங்களாக இருக்கட்டும்.உங்கள் தேர்வும் அவர்கள் தேவையும் ஒன்றிணையும் போதுதான் உங்கள் நோக்கம் ஒரு பூரண பலனைத் தரும்.
இவ் வருடம் புத்தகக் கண்காட்சியானது காட்சிப்படுத்தலும், விற்பனையும் என்ற அடிப்படையில் கடந்த வருடத்தைப் போன்று ஒரு புத்தகத் திருவிழாவாக யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கிறது. பல புத்தக வெளியீட்டாளர்களும், விற்பனையாளர்களும் உங்களை நோக்கி வரவிருக்கிறார்கள். அரிய பல புத்தகங்கள் அங்கு கிடைக்கும். நேரத்தை ஒதுக்கி உங்கள் குடும்பத்துடன் செல்லுங்கள். உங்கள் வீட்டு முற்றத்திலே நடைபெறவிருக்கும் இந்தத் திருவிழா உங்களுக்கானது. எனவே, இந்தத் திருவிழாவுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் ஆதரவே இவ்வாறான நிகழ்வுகள் எமது சமூகத்தில் தொடர்ந்து நடப்பதற்கு மூல காரணமாயிருக்கப் போகிறது. எனவே, இந்த நிகழ்வு நடைபெறும் தினங்களில் ஒருநாளாவது சில நிமிடங்களை ஒதுக்கி முக்கியமாகக் குடும்ப உறுப்பினர்களோடு அங்கு செல்லுங்கள்.புத்தகங்களை வாங்காவிட்டாலும் அவற்றை எடுத்து அதன் பக்கங்களை ஒரு முறை உங்கள் விரல்கள் புரட்டட்டும். நிச்சயமாகப் பலன் கிடைக்கும்.
உங்கள் வீடுகளை இனிமேல் அழகுப் பொருட்களால் அலங்கரிக்க வேண்டாம். அதற்குப் பதிலாகப் புத்தகங்களால் அழகுபடுத்திப் பாருங்கள். அதன் அற்புதத்தை உணர்வீர்கள்.
கணபதி சர்வானந்தா (மூத்த ஊடகவியலாளர்)