கடும் கட்டுப்பாடுகளுடன் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு!

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களைப் பொதுமக்களுக்குக் காண்பித்து  விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செய்த விண்ணப்பத்திற்கமைய உடைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05.08.2025) பிற்பகல்-01.30 மணி முதல் மாலை-05 மணி வரை சித்துபாத்தி இந்துமயான வளாகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான எட்டு ஒழுங்குவிதிகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மேற்படி நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதால் நீதிமன்ற நடவடிக்கைக்குரிய கண்ணியம் அந்த நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். 

காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணமொன்றைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில் முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச் சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும். 

இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம் மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள். 

பங்குபற்றும் நபர்கள் மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகின்றது.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

பங்குபற்றும் நபர்கள் காண்பிக்கப்படும் சான்றுப் பொருட்களைக் கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. 

மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதால் மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந் நடவடிக்கை நடைபெறும் வேளையில் அரியாலை சித்துபாத்தி இந்துமயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

மேற்படி ஓழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த ஒழுங்குவிதி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.