யாழ்ப்பாணம் அரியாலை சித்துபாத்தி இந்துமயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (14.08.2025) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சித்துபாத்தி மயானத்தில் இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட அகழ்வுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த-06 ஆம் திகதி வரை 32 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந் நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாம் பகுதி ஆய்வை எதிர்வரும்-22 ஆம் திகதி ஆரம்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்த இடத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் தற்போது வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக மேலும் 8 வாரங்கள் கால அவகாசம் தேவை என அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர்.ராஜ் சோமதேவவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக யாழ்.மாவட்டச் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவநாதனால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஜெ.ஜெயரூபன், வி.திருக்குமரன், குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும், கனிஷ்ட சட்டத்தரணிகளும் தோன்றியிருந்தனர்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முக்கியமாக மூன்று கோரிக்கைகளை நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்வைத்தார். நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பான பொறிமுறைகள் சம்பந்தமாக தனது முன்மொழிவுகளைச் சட்ட மருத்துவ அதிகாரி மன்றுக்கு அறிக்கையிட வேண்டும், நிதிப் பங்கீட்டின் போது மயானத்தின் உள்ளும், வெளியும் ஸ்கான் பரிசோதனை செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும், புதைகுழிகள் தொடர்பில் அடையாளம் காட்டும் மக்களை குற்றப் புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்காமல் இருப்பதனை மன்று உறுதி செய்ய வேண்டும் எனத் தனது முன்மொழிவுகளைச் செய்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மழை காலத்துக்கு முன்னர் அகழ்வுகள் செய்வதற்கு ஏதுவாக குண்டு செயலிழக்கும் பிரிவினால் அகழ்வின் போது எடுத்து ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்ட பரல் சம்பந்தமான அறிக்கை மற்றும் மண் பரிசோதனை செய்ய ITI மற்றும் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகள் கோரிப் பெற வேண்டிய அவசியத்தை மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே கொழும்பிற்கு மாற்றப்பட்ட 28/99 ஆம் வழக்கை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார் குறித்த விண்ணப்பம் தொடர்பில் தமக்கு அதிகாரம் இல்லை என நீதிவான் பதிலளித்தார். குறித்த விண்ணப்பம் மேன்முறையீடு நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விண்ணப்பம் என்பது ஜனாதிபதி சட்டத்தரணிக்குத் தெரியாதா? என அங்கே பிரசன்னமாகியிருந்த ஏனைய சட்டத்தரணிகள் கூறினர்.
குறித்த 28/99 வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது எனவும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்பு யாரையும் சந்தேகநபர்களாகப் பெயர் குறிப்பிடாத வரையில் அதுகுறித்துக் கட்டளை வழங்க இம் மன்றுக்கு இயலாது எனவும், குறித்த விண்ணப்பம் குறித்த 28/99 இலேயே செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அறிவுறுத்தப்பட்டார்.
மேலும், 2003 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையை மன்றில் சமர்ப்பித்து அதில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளது எனவும், அதில் இராணுவமே பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் இந்த வழக்கின் ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலையிடக் கூடாது எனவும், மரண விசாரணை அதிகாரியே விசாரணை நடத்தவேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டதை நினைவுபடுத்திய நீதவான் முரண்பாடாக விண்ணப்பம் செய்வதாக ஆட்சேபித்தார். எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்துக் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.
நிபுணர் பரிசோதனை பற்றிக் கூறிய யாழ்.மாவட்டச் சட்ட மருத்துவ அதிகாரி செ.செல்லையா பிரணவநாதன் டிஎன்ஏ பரிசோதனைக் கருவிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வருவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்பொழுது துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாகவும், இனிவரும் காலங்களில் டிஎன்ஏ பரிசோதனைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செய்ய முடியுமெனவும் தெரிவித்தார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஜனாதிபதி சுமந்திரன் புதிதாகச் செய்பவர்களை நம்பமுடியாது எனத் தெரிவித்ததுடன் கொழும்பில் ஜீன்டெக் தனியார் நிறுவனத்திலேயே செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.