வடக்கு- கிழக்கில் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னதாகத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு- கிழக்குத் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், இதற்கு வர்த்தக சங்கங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்படப் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி ஹர்த்தால் இடம்பெறுமெனவும், எனினும், பலரின் நன்மை கருதி நாளை காலையில் மாத்திரம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்மக்களால் தூக்கியெறியப்பட்ட ஒருவர் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காகக் ஹர்த்தாலைப் பயன்படுத்த நினைப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். ஹர்த்தால் தற்காலத்துக்கு ஒவ்வாத போராட்ட வடிவம் எனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையில் நாளைய ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனத் தமிழ் அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.