யாழ் தீவகம் முழுவதையும் ஒரே இரவில் கலங்கடித்த கோரப் படுகொலை: நடந்தது என்ன?



யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(10.08.2025) உள்நுழைந்த மூவர் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களால் கொடுரமான முறையில் நடாத்திய தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச்  சம்பவத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.         

கடந்த கால யுத்தத்தின் பின்னர் தீவகத்தில் நடந்த மிக மோசமான கொலை இதுவெனப் புங்குடுதீவு முதலாம் வட்டார மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.  

நடந்தது என்ன?  

ஸ்கூட்டி ரக மோட்டார்ச் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு-07.15 மணியளவில் சென்ற மூவர் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீது வாள்களால் வெட்டியும், கத்தியால் குத்தியும் சரமாரியாகவும், மிகவும் கோரமாகவும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் முகத்திலும், காலிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதனைத் தடுக்கச் சென்ற குடும்பஸ்தரின் உறவினர்களான இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதல் நடாத்தி விட்டுத் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாரும், தனியார் பேருந்து உரிமையாளருமான அற்புதராசா அகிலன் (வயது-46) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தின் பின்னணி 

உயிரிழந்த நபருடன் தாக்குதல் நடாத்திய பிரதான சந்தேகநபருக்கு காணப்பட்ட முன்பகை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தாக்குதல் நடாத்திய பிரதான சந்தேகநபர் போதைப் பொருள் பாவனையில் ஊறித் திளைத்த ஒருவர் என்பதுடன் பல்வேறு குற்றச் செயல்களுடனும், சமூக விரோதச் செயல்களுடனும் தொடர்புடைய ஒருவராவார்.

இவ்வாறான செயற்பாடுகளைத் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்த குடும்பஸ்தரின் பின்னணி 

உயிரிழந்த குடும்பஸ்தர் ஆரம்பத்தில் சீவல் தொழில் செய்து தனது உழைப்பில் படிப்படியாக முன்னேறித் தற்போது தீவகத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துக்கு உரிமையாளராகத் திகழ்கிறார்.

இவர் சமூக விரோத செயற்பாடுகள் எவற்றிலும் தொடர்புபடாத ஒருவரெனவும் தெரியவருகிறது.      

பிரதான சந்தேகநபர் இவர் தான்!  


தாக்குதல் நடாத்திய பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியைச் சேர்ந்தவரெனவும், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவரெனவும் தெரிய வருகிறது. இவர் அதிகரித்த போதைப் பொருள் பாவனை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரெனவும் தெரிய வருகிறது. 

இவர் மீது பல நீதிமன்றப் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும்  சுட்டிக்காட்டத்தக்கது.    

இதேவேளை, தாக்குதல் நடாத்திய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட தாக்குதலாளிகள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் தாக்குதலாளிகளைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

(புலனாய்வு ரிப்போர்ட்:- எஸ்.ரவி)