நல்லூரில் மாபெரும் நீர்வளக் கண்காட்சியின் மூன்றாம் நாள் ஆற்றுகை நிகழ்வுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகிறது. 

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    

இன்று மாலை-06 மணி முதல் இடம்பெறும் ஆற்றுகையின் முதல் நிகழ்வாக வன்னிப் பிராந்தியக் கோவலன் கூத்துப் பாடல்களை அண்ணாவியார் வேலாயுதம் ஸ்ரீஸ்கந்தராஜா, தம்பையா கணேசமணி, கணபதிப்பிள்ளை அருந்தாகரன்ஆகியோர் இணைந்து வழங்கவுள்ளனர்.          

மக்கள் பங்கேற்பு முறையில் நீர் முகாமைத்துவம், நீர் ஆளுகை செய்வது பற்றிய பரீட்சார்த்த முயற்சியின் ஒரு உதாரணமாக காரைநகர் ஜே-48 சிவகாமி அம்மன் கோவிலடி, விக்காவில், வெடியரசன் வீதி- குறிச்சிகளைச் சார்ந்த நீர்ப்பாவனையாளர் வட்டத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

பெண்களை மட்டுமே கொண்ட இச் சமூக செயலாற்றுகைக்கான வட்டம் கடந்த சில மாதங்களாகத் தம்மைத் தாமே ஒழுங்கு செய்து கொண்டு வந்திருக்கின்ற முறைமை பற்றியும், தமது குறிச்சியில் நிலவும் நீண்டகாலக் குடிநீர்ச் சிக்கல் மற்றும் அதன் பரிணாமங்களைக் கையாள்வது தொடர்பில் அவையினருடன் இணைந்து கலந்துரையாடுவர்.