இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை (15.09.2025) தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஆரம்பமாகியது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் உண்ணாநோன்பு ஆரம்பித்த நேரமான காலை-09.45 மணியளவில் இரண்டு மாவீரர்களின் சகோதரி திருமதி.பாக்கியநாதன் அசோகா ஈகைச்சுடர் ஏற்ற, சமநேரத்தில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் மாவீரர் சேரமானின் புதல்வர் றுஷாந்தன் ஈகைச் சுடரேற்றி அஞ்சலித்தார். தொடர்ந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுத் திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்பணி.வசந்தன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் நா.இன்பநாயகம், வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன், மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி, போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன், உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ந.விஜயதரன், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று முற்பகல்-10.30 மணி தொடக்கம் நேற்று மாலை-04 மணி வரை திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் தற்காலிகக் கொட்டகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடாத்தப்பட்டது.