தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளின் பிரதான நிகழ்வு வெள்ளிக்கிழமை (26.09.2025) நல்லூரில் தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நண்பகல்-12 மணியளவில் சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த முதியவர் தள்ளாத வயதிலும் தனியாக நீண்டதூரம் பயணித்து வந்து தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போது சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகத் திலீபனின் நினைவுத் தூபியைப் பார்த்து திலீபனின் உன்னத தியாகத்தை எண்ணி மனமுருகிக் கண்ணீர் சிந்தினார். இதன்பின்னர் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகக் கீழே விழுந்தும் வணக்கம் செலுத்தினார்.
இதன்பின்னர் அங்கு நின்ற தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் இளம் செயற்பாட்டாளரான பெண்ணொருவர் குறித்த முதியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெதுவாகப் படிகளிலிருந்து இறக்கி அவரது கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறித் தேற்றினார். எனினும், அவர் அங்கு நின்றும் திலீபனின் நினைவுத் தூபியில் காணப்பட்ட திலீபனின் உருவப் படத்தைப் பார்த்து மீண்டும் விம்மி விம்மி அழுதவாறு இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். இக்காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
இதேவேளை, மேற்படி முதியவர் 1987 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபன் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களுடன் மக்களாகப் பார்வையாளராகக் கலந்து கொண்டிருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.