வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியன இணைந்து முதன்முறையாக நடாத்திய விசேட இரத்ததான முகாம் நிகழ்வு தேர்த் திருவிழா நாளான சனிக்கிழமை (06.09.2025) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை ஆலயச் சூழலில் ஆற்றங்கரை வீதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 27 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இதேவேளை, தானங்களில் சிறந்த தானமாகிய இரத்ததானத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் தலைவர் பா.வீரசுரேந்திரனின் எண்ணத்திலும், அவரது இடைவிடாத முயற்சியாலும் மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வு இம் முறை ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டிருந்தது. செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வில் முதல் தடவையிலேயே 27 பேர் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கியமை பாராட்டுதற்குரியது. எதிர்வரும் காலங்களிலும் சந்நிதியானின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் தடையின்றி இரத்ததான முகாம் நிகழ்வு நடைபெற அனைவரும் இயன்றளவு பங்களிப்பை வழங்கி ஊக்குவிப்போம்.