மூத்த சுயாதீன ஊடகவியலாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தா எழுதிய " இவர்கள் மகாத்மாக்கள்" நூலின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) மாலை-05.30 மணி முதல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
செல்வி.காருண்யா புஷ்கரனின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் ஆசிரியர் யோ.சுதந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு திருமுருகன் ஆசி உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா வாழ்த்துரையையும் நிகழ்த்தினர்.
டில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவன் ஐ.வி.மகாசேனனின் நூல் அறிமுக உரையைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் நூலை வெளியிட்டு வைக்க கலாபூஷணம், பண்டிதை.திருமதி.வைகுந்தம் கணேசபிள்ளைக்கு சிறப்புப் பிரதி வழங்கப்பட்டது. நிகழ்வில் பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை கெளரவிக்கப்பட்டார். நூலாசிரியர் நிகழ்வில் கலந்து கொண்ட பலராலும் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உளவளத் துணையாளர் நா.நவராஜ், கவிஞர் நாக.சிவசிதம்பரம் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துரைகளை ஆற்றினர். தொடர்ந்து நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். இளம் சமூகச் செயற்பாட்டாளர் வ.தனகோபி நன்றி உரை வழங்கினார். உளவள மருத்துவ சேவையாளர் ந.ஞானசூரியர் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார்.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர். கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன், திருவாடுதுறை ஆதின திருமுறைச் செல்வர் ந.பரமேஸ்வரன், கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

